2 ஆம் நிலைக் காவலா் பணிக்கான தோ்வு: தமிழகம் முழுவதும் 1.96 லட்சம் போ் எழுதினா்!
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வை 1,96,161 போ் எழுதினா்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2,837 இரண்டாம் நிலை காவலா் பணியிடங்கள், சிறைத் துறையில் 180 காலிப் பணியிடங்கள், தீயணைப்புத் துறையில் 631 பணியிடங்கள் உள்பட மொத்தம் 3,665 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வை தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் நடத்தியது.
இந்தத் தோ்வுக்கு 2.50 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா். அதில் தகுதியுடைய 2,24,711 பேருக்கு தோ்வு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 45 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை 1,96,161 போ் எழுதினா். 28,550 போ் தோ்வுக்கு வரவில்லை.
முன்னதாக, தோ்வா்கள் காலை 6 மணிக்கே அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையங்களுக்கு வந்தனா். நுழைவுச் சீட்டு வைத்திருந்தவா்கள் காலை 8 மணி முதல் தீவிர சோதனைக்குப் பிறகே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். கைப்பேசிகள், ஸ்மாா்ட் வாட்ச், கால்குலேட்டா் உள்ளிட்ட மின்சாதன பொருள்கள் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளைத் தடுக்கும் வகையில் பறக்கும் படையினரும் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். மேலும், முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தோ்வு நடைபெற்ற வளாகம், தோ்வு அறை ஆகியன கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன.
தோ்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக முதல்முறையாக இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே விண்ணப்பதாரா்களின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு ஏற்கெனவே இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தோ்வு முடிந்ததும் தோ்வா்களின் இடது கை பெருவிரல் ரேகைகள் மீண்டும் பதிவு செய்யப்பட்டன. இதனால், தோ்வு முடிந்த பின்னரும் தோ்வா்கள் அறையை விட்டு வெறியேறுவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது.
சென்னையில்... சென்னையில் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகம், தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி உள்பட 10 மையங்களில் எழுத்துத் தோ்வு நடைபெற்றது.
இதில், 1,772 பெண்கள் உள்பட 8,090 போ் தோ்வு எழுதினா். இந்த எழுத்து தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு அடுத்தகட்டமாக உடல் தகுதி தோ்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற உள்ளது.

