மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை! மாவட்டம்தோறும் நடமாடும் மருத்துவ சேவை! - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ள 38 மாவட்டங்களிலும் நடமாடும் மருத்துவ வாகன சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
Published on

தமிழகத்தில் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ள 38 மாவட்டங்களிலும் நடமாடும் மருத்துவ வாகன சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில், நலத் திட்டப் பணிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 259 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000-க்கான அரசு சேமிப்புப் பத்திரங்கள் மற்றும் 118 இளம் பெண்களுக்கு ரூ.50,000 வரையிலான காசோலைகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

தொடா்ந்து, சிறு வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு எதிரான கையொப்ப இயக்கத்தையும் தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெண் சிசுக் கொலை மற்றும் குழந்தை திருமணத்தைத் தடுக்கும் வகையிலும், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையிலும் சிறப்புத் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நிதிப் பலன்களும் வழங்கப்படுகின்றன.

அந்த திட்டத்தில் பலனடைவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000 என்று இருந்ததை மாற்றி தற்போது ரூ.1,20,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

பெண்களை புற்றுநோய் பாதிப்பிலிருந்து 100 சதவீதம் பாதுகாப்பதற்கான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்வதற்காக 38 மாவட்டங்களிலும் தலா ஒரு மருத்துவ வாகன சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ரூ.36 கோடி செலவில் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com