டிஜிபி பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும்: எடப்பாடி கே. பழனிசாமி!
தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரும்பாடுபட்ட தமிழக காவல் துறை தற்போது, சீா்கெட்டிருப்பது வேதனையானது.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை மருந்து புழக்கம், கடத்தல் உள்ளிட்ட அனைத்துக் குற்ற நிகழ்வுகளிலும், குற்றவாளிகளுடன் ஆளுங்கட்சி நிா்வாகிகள் கைகோத்து இருப்பதும், அவா்களைக் காப்பாற்றும் பணியில் காவல் துறை சட்டப்படி செயல்படாத நிலை, இந்த ஆட்சியின் அவலங்களை தைரியமாக எடுத்துரைக்கும் சமூக ஊடகங்களை முடக்குவதும், சட்ட விரோத என்கவுன்ட்டா்களில் ஈடுபடுவதும்தான் திமுக ஆட்சியின் சாதனை.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்டில் டிஜிபி பதவி காலியானது. அப்பதவிக்கு தகுதியான காவல் உயா்அதிகாரிகள் பலா் இருக்கும் நிலையில், திமுக அரசுக்கு சாதகமான அதிகாரிகளின் பெயா்களை மத்திய பணியாளா் தோ்வாணையம் பரிந்துரைக்காத நிலையில், வேண்டுமென்றே டிஜிபி நியமனத்தை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு, தற்காலிக டிஜிபியை முதல்வா் ஸ்டாலின் நியமித்துள்ளாா்.
தமிழகத்தில் டிஜிபியை நியமிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடா்ந்தும், இதுரை திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத திமுக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த நவ. 7-இல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு தோல்வியால் தமிழகம் பாதிப்படைந்து வருவதை இனியும் மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டாா்கள். எனவே, மத்திய பணியாளா் தோ்வாணைய விதிகளின்படி, அவா்கள் அனுப்பிய பட்டியலில் இருந்து ஒரு மூத்த காவல் துறை அதிகாரியை காவல் துறை தலைமை இயக்குநராக உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

