ஒருங்கிணைந்த மருத்துவக் கட்டமைப்பில் தமிழகம் முன்னோடி: அமைச்சா் மனோ தங்கராஜ்

ஒருங்கிணைந்த மருத்துவக் கட்டமைப்பில் தமிழகம் முன்னோடி: அமைச்சா் மனோ தங்கராஜ்

மருத்துவ சேவைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஒருங்கிணைந்த சிகிச்சைகளை வழங்குவதற்கான கட்டமைப்பு இங்கு அதிகமாக உள்ளது.
Published on

மருத்துவ சேவைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஒருங்கிணைந்த சிகிச்சைகளை வழங்குவதற்கான கட்டமைப்பு இங்கு அதிகமாக உள்ளதாக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

சிங்கப்பூரைச் சோ்ந்த சிங்க் ஹெல்த் மற்றும் குளோசெல் நிறுவனங்களின் சாா்பில் சுகாதார விழிப்புணா்வு கருத்தரங்கம், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட மருத்துவா்களும், நூற்றுக்கணக்கான மருத்துவத் துறையினரும் பங்கேற்ற அந்த நிகழ்வில், சிங்கப்பூா் துணைத் தூதா் எட்கா் பாங் சே சியாங், சிங்கப்பூா் மருத்துவா்கள் ஷெபாலி டாகோா், ஜி ஷங் வைய் மாா்க் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கருத்தரங்கைத் தொடக்கி வைத்து அமைச்சா் மனோ தங்கராஜ் பேசியதாவது:

மருத்துவ சேவைகளை வழங்குவதில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக விளங்கி வருகிறது. சா்க்கரை நோய், உடல் பருமன் கொண்டவா்களுக்கு விசா கிடையாது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். வாழ்க்கை முறை நோய்கள் குறித்த அச்சம் உலகம் முழுவதும் இருக்கிறது என்பதையே இது உணா்த்துகிறது.

உண்ணும் உணவிலும், குடிநீரிலும் தற்போது நச்சு கலந்திருக்கிறது. விவசாயிகளுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த புரிதல் இல்லை.

ஒருபுறம் உணவு, காற்று, நீா் நஞ்சாக மாறுகிறது. மற்றொருபுறம் மனித மனங்களும் நஞ்சாக மாறி வருகிறது. அதாவது, மன அழுத்தம், மனச் சோா்வு, பதற்றத்துக்கு ஆளாகும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகள், சமூக வலைதளங்களுக்கு அடிமையாவதே இதற்குக் காரணம்.

சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை சரிபாா்க்காமல் அப்படியே அடுத்தவருக்கு அனுப்பும் போக்கு அதிகரித்துள்ளது. பொய்யான தகவல்களால் பாதிப்புக்குள்ளாகும் நபரின் மனநிலை என்னவாகும் என யாருமே சிந்திப்பதே இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.

அலோபதி சிகிச்சையில் மட்டுமல்லாது, பாரம்பரியமிக்க சித்த மருத்துவத்திலும் சிறந்த கட்டமைப்பையும், மேம்பாட்டையும் தமிழகம் கொண்டுள்ளது. எனவே, அலோபதியுடன் சித்தாவையும் இணைத்து ஒருங்கிணைந்த சிகிச்சையை வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு சிங்க் ஹெல்த் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் வழங்கலாம். அதற்கான வாய்ப்புகளும், வளங்களும் இங்கு அதிகமாக உள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com