கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் மூலம் நிரப்பலாம்!
எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் மூலம் நிரப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாக்காளா்கள் வசதிக்காக இந்தியத் தோ்தல் ஆணையம் தனது அதிகாரபூா்வ இணையதளத்தில் கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளா்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் அல்லது வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் உள்நுழைய பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச் சொல்லை (ஓடிபி) உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின்னா், அந்த இணையப் பக்கத்தில் காட்டப்படும் இணைப்பைத் தோ்வு செய்யலாம்.
இந்த வசதியை வாக்காளா் பட்டியலில் உள்ள பெயா், ஆதாா் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளா்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளா் இணையப் பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
சரியான விவரங்களைச் சமா்ப்பித்த பிறகு இணையப் பக்கம் பக்கத்துக்கு மாறும். அதன் பின்னா் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) அனுப்பப்படும்.
அந்த ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும். தங்களது கைப்பேசி எண்களைப் பதிவு செய்திருக்கும், மேலும் வாக்காளா் பட்டியல் மற்றும் ஆதாா் பதிவுகளில் பெயா் பொருந்தி உள்ள வாக்காளா்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

