

தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 10) ரூ. 767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர, திமுக அரசில் கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும் பேசினார்.
மகளிர் உரிமைத் தொகை குறித்துப் பேசிய முதல்வர்,
"மகளிருக்கு உரிமைத்தொகை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னபோது, அப்படியெல்லாம் தர முடியாது என்று, யார் சொன்னார்? தமிழ்நாட்டின் நிர்வாகத்தை பாழ்படுத்திய அதிமுக-வும் சொன்னார்கள். ஆனால், நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சரி செய்ததுமே உரிமைத்தொகையை வழங்க ஆரம்பித்தோம்!
அப்போதும், என்ன சொன்னார்கள் என்றால், இந்த திட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள் என்று அவர்கள் வதந்தியை கிளப்பினார்கள். ஆனால், அதற்கு மாறாக இதுவரைக்கும் 27 மாதங்களில் 1 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு 27 ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறோம். 1,000 ரூபாய் எதற்கென்று சிலர் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்கள். நான் தெளிவாக சொல்கிறேன்… எங்கள் அண்ணன் ஸ்டாலின் வழங்குகின்ற மாதாந்திர சீர் என்று என்னுடைய சகோதரிகள் சொல்கிறார்களே! இது உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை!
இந்தத் தொகையை வழங்க ஆரம்பிக்கும்போது என்னிடம் கேட்டார்கள்….. “யாருக்கு இந்த ஆயிரம் ரூபாய்?" கிடைக்கும் என்று சட்டமன்றத்தில் கேட்டார்கள்! நான் சொன்னேன், “யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவையோ, அவர்களுக்கெல்லாம் கிடைக்கும்” என்று நான் சொன்னேன்.
இப்போதும் சொல்கிறேன் - தகுதியுள்ள எல்லோருக்கும் நிச்சயம் கிடைக்கும். நான் உறுதியோடு சொல்கிறேன்… தமிழ்நாட்டு மகளிர் முன்னேறி வருவதற்கு துணையாக இருக்கும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, தமிழ்நாட்டின் வளர்ச்சியின் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமாக இருக்கும்போது, நம்முடைய திராவிட மாடல் 2.0 அரசிலும் நிச்சயம் தொடரும்!
சமூக முன்னேற்றத்திற்காக – விளிம்புநிலை மனிதர்களுக்கு உதவுவதற்காக – எளிய மனிதர்களை அரவணைப்பதற்காக – பின்தங்கியுள்ள மக்களை கைதூக்கி விடுவதற்காக – நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஏராளமான திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம்" என்று பேசினார்.
மேலும், எஸ்.ஐ.ஆர். குறித்துப் பேசிய முதல்வர்,
"தேர்தல் நெருங்கி வந்துவிட்டது! இப்போதே தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டது!
இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கும் முக்கியமான வேண்டுகோள் என்ன என்றால், பொதுமக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமக்குதான் போடப்போகிறீர்கள்… இந்த ஆட்சி தான் வரவேண்டும் என்று போடப்போகிறீர்கள்… அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அதுதான் முக்கியம். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி உங்களின் வாக்குகள், நீக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரே வேலை – தேர்தலை முறையாக, ஒழுங்காக - நேர்மையாக - உண்மையாக நடத்துவதுதான். அதைக்கூட அவர்கள் பல மாநிலங்களில் செய்யவில்லை. மற்ற மாநிலங்களிலிருந்து வரும் செய்திகளை படிக்கும்போது நமக்கெல்லாம் அதிர்ச்சியாக இருக்கிறது! நீங்கள் எல்லோரும் செய்திகளில், சோஷியல் மீடியாக்களில் பார்த்திருப்பீர்கள். அரியானா மாநிலத்தில் அநியாயமாக நடந்திருக்கிறது!
ஒரு மாநிலத்தில் வாக்காளராக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்திற்கு வந்து வாக்களித்திருக்கிறார்கள். ஒரே ஒரு வீட்டு முகவரியில் 66 போலி வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவருடைய வீட்டு முகவரியில் 500 வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
முன்னாள் எம்.பி. ஒருவரே, இரண்டு மாநிலங்களில் வாக்களித்து வெளிப்படையாக போட்டோ போட்டிருக்கிறார். அந்த மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது வாக்களித்த 35 இலட்சம் பேரால், சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. ஆனால், புதிதாக 25 இலட்சம் வாக்காளர்கள் அந்த மாநிலத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் – இளம் தலைவராக விளங்கிக்கொண்டிருக்கும் என்னுடைய ஆருயிர் சகோதரர் ராகுல்காந்தி இதைத் தெளிவாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆனால், தேர்தல் ஆணையம் பதில் சொல்லாமல் பதுங்குகிறார்கள்! இது ஏதோ தனக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சினை போன்று, அமைதியாக இருக்கிறார்கள்.
இந்த சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு வாக்காளரும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பேர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். உங்களின் வாக்குச் சாவடியில் போலியான நபர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்களா என்பதையும் கண்காணிக்குமாறு உங்களை நான் விரும்பி கேட்டுக்கொள்கிறேன். வாக்களிப்பது நம்முடைய ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை! ஜனநாயக உரிமை! அந்த உரிமையை யாராலும் தடுக்க முடியாது! தேர்தல் ஆணையமே அதை செய்ய நினைத்தாலும் மக்களாகிய நீங்கள்தான் தடுக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க | செயல்படாத பழைய வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்க வேண்டுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.