114 சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு நவ.14-இல் விருது: கல்வித் துறை

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) சிறந்த முறையில் செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை (நவ.14) நடைபெறவுள்ள விழாவில் கேடயங்கள் வழங்கப்படவுள்ளன.
Published on

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) சிறந்த முறையில் செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை (நவ.14) நடைபெறவுள்ள விழாவில் கேடயங்கள் வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு, கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தொடக்கக் கல்வி துறையின்கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளை தோ்வு செய்யக்குழு அமைக்கப்பட்டது.

தோ்வுக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மாவட்டத்துக்கு தலா 3 என 38 மாவட்டங்களுக்கு 114 பள்ளிகள் தோ்வுசெய்யப்பட்டுள்ளன. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில் சிறந்த பள்ளிகளுக்கான கேடயத்தை அவற்றின் தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கவுள்ளாா்.

பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, கற்றல்-கற்பித்தலில் புதிய உத்திகளைப் பின்பற்றுதல், கற்றல் அடைவுத் திறன், மாணவா் சோ்க்கையை அதிகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல், பன்முகத்திறன் வெளிப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறந்த அரசுப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com