

அவிநாசி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மரக்கடை உரிமையாளரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த பெண்ணை அவிநாசி காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வள்ளுவர் வீதி அருகே தாமஸ் லைன் பகுதியில் குடியிருப்பவர் சின்னப்பராஜ் (65). இவர் அதே பகுதியில் சொந்தமாக மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி அந்தோணியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.
அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி எஸ்.எல்.சி. கார்டன் வேலாங்காடு பகுதியை சேர்ந்த கனகராஜ் மனைவி பூமணி (48). இவரின் கணவர் கனகராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில், பூமணிக்கும், சின்னப்பராஜூக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்கம்போல மது அருந்திவிட்டு பூமணியின் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு சின்னப்பராஜ் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், பூமணி தாக்கியதில் பலத்த காயமடைந்து பாதிக்கப்பட்ட சின்னப்பராஜ் கீழே விழுந்துள்ளார்.
இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பூமணி, கீழே விழுந்த சின்னப்பராஜ் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். இதில், சின்னப்பராஜ் பலியான நிலையில், பூமணி அவிநாசி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி காவல் துறை அதிகாரிகள், சின்னப்பராஜின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவிநாசி காவல் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, பூமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.