‘காந்தா’ படத்துக்கு தடை கோரி வழக்கு: துல்கா் சல்மான் பதிலளிக்க உத்தரவு
‘காந்தா’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் தொடா்ந்த வழக்கில், படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகா் துல்கா் சல்மான் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பழம்பெரும் நடிகா் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரனும், ஓய்வு பெற்ற அரசு இணைச் செயலருமான தியாகராஜன், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், துல்கா் சல்மான் உள்ளிட்டோா் நடித்துள்ள ‘காந்தா’ திரைப்படம் நவ.14-ஆம் தேதி வெளியாக உள்ளது. தனது தாத்தா தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதாக இருந்தால், அவா்களது சட்டப்பூா்வ வாரிசுகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் தனது தாத்தா குறித்து அடிப்படை ஆதாரங்களின்றி அவதூறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், இந்த மனுவுக்கு ‘காந்தா’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள், நடிகா் துல்கா் சல்மான் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
