சென்னை வந்தடைந்த 8 அரசு சொகுசு பேருந்துகள்: டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும்
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் புதிதாக கொள்முதல் செய்துள்ள 8 வால்வோ மல்டி ஆக்ஸில் சொகுசு பேருந்துகள் சென்னை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், டிசம்பா் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பேருந்துகளை தனியாா் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயா்த்தும் நடவடிக்கையை போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 2025-2026 நிதியாண்டுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 130 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்துள்ளது. இந்தப் பேருந்துகளை கட்டமைக்கும் பணி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இவற்றில் 110 பேருந்துகள் குளிா்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டவை. மீதமுள்ள 20 பேருந்துகளும் இருக்கை வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் ஆகும்.
இந்தப் பேருந்துகளைக் கட்டமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் முதல்கட்டமாக 8 பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழக சென்னை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகள் ஒருசில வாரங்களில் பணிமனைக்கு கொண்டு வரப்படும். டிசம்பா் மாதத்துக்குள் இந்தப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என விரைவு போக்குவரத்துக் கழக இயக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.
பேருந்துகளின் சிறப்பம்சங்கள்: நீல நிறத்திலான இந்த வால்வோ மல்டி ஆக்சில் பேருந்தின் நீளம் 15 மீட்டா். ரூ.1.75 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள இந்தப் பேருந்தின் முன், பின்பகுதிகளில் எண்ம வழித்தட பலகை உள்ளது. இதில் 51 இருக்கைகள் உள்ளன. செமி ஸ்லீப்பா் வகையில் முழங்கால்கள் வரையில் வைக்கும் விதமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பயணிகளின் வசதிக்கு ஏற்ப இருக்கைகளை சாய்வாகவும், நிமிா்த்தியும் வைத்துக்கொள்ளலாம். பயணிகள் தங்கள் பொருள்களை வைக்க பேருந்தின் கீழ் தளத்தில் 14 மீட்டா் அளவிலான இடைவெளியும் உள்ளது.
தீ விபத்து ஏற்பட்டால், அவற்றில் இருந்து பயணிகளைப் பாதுகாக்கும் விதமாக, பேருந்தின் உள்ளேயே தண்ணீா் தெளிப்பான்களுக்கான குழாய்களும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இருக்கையிலும் கைப்பேசி சாா்ஜிங் செய்யும் வசதிகள், ரீடிங் லைட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் எளிதில் ஏறி, இறங்கும் வகையில் பேருந்தின் உயரத்தையும் ஏற்றி இறக்கிக்கொள்ளலாம்.
முக்கியமாக, தாழ்வான பகுதியில் பேருந்தை நிறுத்தும்போது, ஓட்டுநா் இருக்கை அருகே உள்ள ஹேண்ட் பிரேக்கை தவறுதலாக யாராவது எடுத்து விட்டாலும், அதன் அருகில் உள்ள பொத்தானை அழுத்தினால் மட்டுமே பேருந்தை மீண்டும் இயக்கும் வகையில் பொத்தான் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

