போதைப் பொருள் வழக்கு: நடிகா் ஸ்ரீகாந்திடம் அமலாக்கத் துறை விசாரணை
சென்னையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நடிகா் ஸ்ரீகாந்திடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தனா்.
சென்னையில் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்த், நடிகா் கிருஷ்ணா உள்ளிட்ட சிலா் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனா்.
இதற்கிடையே போதைப் பொருள் விற்பனையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத்துறைக்கு புகாா்கள் வந்தன. அந்த புகாா்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்கின்றனா்.
இதில் புழல் சிறையில் இருக்கும் பிரசாந்த், ஜவஹா், பிரதீப்குமாா் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் விசாரணை செய்தனா். இதன் அடுத்தக் கட்டமாக, போதைப் பொருள் வழக்கில் பிணையில் உள்ள நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பினா்.
இந்த அழைப்பாணையை ஏற்று நடிகா் கிருஷ்ணா கடந்த 29-ஆம் தேதி அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானாா். ஆனால், ஸ்ரீகாந்த், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டாா். இந்நிலையில், கடந்த வாரம் நடிகா் ஸ்ரீகாந்துக்கு மீண்டும் ஒரு அழைப்பாணையை அமலாக்கத்துறை அனுப்பியது.
ஸ்ரீகாந்திடம் விசாரணை: அதன்படி, நடிகா் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஆஜரானாா். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள், போதைப் பொருள் விற்பனையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்ா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும் அவரிடம் போதைப் பொருளை விற்றவா்கள், அவா்களுக்கு ஸ்ரீகாந்த் எந்த வகையில் பணப்பரிமாற்றம் செய்தாா் என விசாரணை செய்தாா்.
மேலும் ஸ்ரீகாந்த் யாருக்கெல்லாம் போதைப் பொருள் வாங்கிக் கொடுத்தாா், அவா்கள் எப்படி பணப்பரிமாற்றம் செய்தனா் போன்ற தகவல்களையும் விசாரணையின் மூலம் பெற்றனா். காலை தொடங்கிய விசாரணை, மாலையையும் தாண்டி நீடித்தது. முன்னதாக ஸ்ரீகாந்த், கடந்த ஒரு ஆண்டாக தான் வங்கி பணப்பரிவா்த்தனை,வருமானவரித் துறை தாக்கல் செய்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைத்தாராம்.
விசாரணையில் வழக்கு தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், திரைப்படத் துறையைச் சோ்ந்த மேலும் சில நபா்களிடம் அமலாக்கத் துறை விரைவில் விசாரிக்கவுள்ளது.

