பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்: ரூ.12.50 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பள்ளி மாணவா்களுக்கான 25 வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ரூ.12.50 கோடி நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவா்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் குறுவட்ட, கல்வி மாவட்ட, மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் 38 மாவட்டங்களில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளை நிகழ் கல்வியாண்டில் நடத்த வேண்டியுள்ளது. அதேபோன்று அனைத்து வட்டாரம், வருவாய் மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டிகளையும் ஒருங்கிணைத்து நடத்த வேண்டியுள்ளதால் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும். மேலும், இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக ரூ.12.50 கோடிக்கு நிதி ஒப்புதல் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.
அவரது கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்று போட்டிகளை நடத்த அனுமதி வழங்குவதோடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக ரூ.12.50 கோடிக்கு நிதி ஒப்புதல் வழங்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
