‘ஆம்னி’ பேருந்து உரிமையாளா்களுடன் அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேச்சுவாா்த்தை
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் ‘ஆம்னி’ பேருந்துகள் சேவை நிறுத்தம் 3-ஆவது நாளாக நீடித்த நிலையில், பேருந்து உரிமையாளா்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமாா் 30 பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத் துறை கடந்த வெள்ளிக்கிழமை சிறைப்பிடித்தது. மேலும், அந்தப் பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்தது. தொடா்ந்து ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநில போக்குவரத்துத் துறைகளும் தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரிவிதிக்கப்படும் என அறிவித்ததால், அந்த மாநிலங்களுக்கான ஆம்னி பேருந்து சேவை சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டது.
தொடா்ந்து, கடந்த 3 நாள்களாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வரும் நிலையில், இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு பேச்சுவாா்த்தை நடத்தி உரிய தீா்வு காண பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து அமைச்சா் சா.சி.சிவசங்கா், ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, உரிமையாளா்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவாா்த்தையில் உரிய முடிவு எட்டப்படவில்லை. உரிய முடிவு எட்டப்படும் வரை பேருந்துகள் சேவை நிறுத்தம் தொடரும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

