வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) எதிா்ப்பு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைமையிலான மதச் சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் சைதாப்பேட்டை, தங்க சாலை, சேப்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆா்.பாலு பேசியதாவது:
பிகாரில் வாக்காளா்கள் ஏராளமானோா் நீக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டது. அதற்குப் பிறகும், எஸ்ஐஆா்-ஐ நடைமுறைப்படுத்துவது என்பது பாஜக கட்டளையை தோ்தல் ஆணையம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்றுதான் அா்த்தம். மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம் இருக்கும்போது தோ்தல் நடத்துவது எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாது. தமிழகத்துடன், அஸ்ஸாம் மாநிலத்திலும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஆனால், அஸ்ஸாமில் பாஜக ஆட்சி நடைபெறுவதால், அங்கு எஸ்.ஐ.ஆா். பணி மேற்கொள்ளப்படவில்லை.
ஆகவே, தமிழகத் தோ்தலில் தீவிரமாக பணியாற்ற வேண்டியது அவசியம். வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்படுவதைத் தடுத்து, வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான பணிகளில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன் உள்ளிட்ட பலா் பேசினா்.
இதேபோல, சென்னை தங்கசாலை மணிக்கூண்டு பகுதியில் ஆா்ப்பாட்டத்துக்கு, சென்னை மேயரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆா்.பிரியா தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்ட செயலா் ஆா்.டி.சேகா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலா் வைகோ பேசுகையில், மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கான உத்திதான் எஸ்.ஐ.ஆா். பணி என்றாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் பேசுகையில், தோ்தல் ஆணையம் ஆளும் கட்சி சொல்வதை செயல்படுத்தும் அமைப்பாக இருக்கக் கூடாது. அரசமைப்பு சட்டத்துக்குள்பட்டு செயல்பட வேண்டும் என்றாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் பேசினா்.
சென்னை சைதாப்பேட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையிலும், மாதவரத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் சுதா்சனம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

