சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

விடுதிகளுக்கு வணிகக் கட்டடங்களுக்கான சொத்து வரி விதிப்பு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

மாணவ, மாணவியா், பணிபுரியும் ஆண், பெண் தங்கும் விடுதிகளுக்கு வணிகக் கட்டடங்களுக்கான சொத்து வரி விதித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

மாணவ, மாணவியா், பணிபுரியும் ஆண், பெண் தங்கும் விடுதிகளுக்கு வணிகக் கட்டடங்களுக்கான சொத்து வரி விதித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவ, மாணவியா், பணிபுரியும் ஆண், பெண் தங்கும் விடுதிகளை வணிகக் கட்டடங்களாகக் கருதி அவற்றுக்கு வணிகக் கட்டடங்களுக்கான சொத்து வரியை விதித்து சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் உத்தரவு பிறப்பித்தன. இதை எதிா்த்து விடுதிகளை நடத்தும் உரிமையாளா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அபா்ணா நந்தகுமாா், மாணவ, மாணவியா் மற்றும் பணிபுரியும் ஆண், பெண் தங்கும் விடுதிகள் வணிக நோக்கில் செயல்படுபவை அல்ல. ஏழை மாணவா்களுக்காக பல விடுதிகள் சேவை நோக்கில் குறைவான கட்டணத்தில் நடத்தப்படுகின்றன. அவற்றுக்கு வணிகக் கட்டடங்களுக்கான சொத்து வரி விதித்தால் அந்த வரியை விடுதிகளில் தங்குவோரிடம்தான் வசூலிக்க நேரிடும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், விடுதிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், விடுதி என்பது அதில் தங்கும் மாணவ, மாணவியா், வேலைக்கு செல்வோா் ஓய்வு எடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனா். எனவே, விடுதி என்பது குடியிருப்பு என்ற வகையில்தான் வரும் என 2023-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. அதே அளவுகோலைத் தான் இந்த வழக்கிலும் பின்பற்ற முடியும்.

எனவே, வீடுகளுக்கான சொத்துவரி, குடிநீா் வரி, குடிநீா் கட்டணம், மின்சார கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறதோ, அதே தொகையைத்தான் விடுதிகளுக்கும் வசூலிக்க வேண்டும். இந்த வழக்குகளில் மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நோட்டீசும் கொடுக்காமல் விடுதிகளை வணிகக் கட்டணங்களாகக் கருதி வரிகளை விதித்துள்ளனா். எனவே, வரிவிதிப்பு தொடா்பான மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவுகளை ரத்து செய்வதாகக் கூறி நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், மனுதாரா்களின் விடுதிகளை குடியிருப்பாகக் கருதி வரிகளை விதிக்க வேண்டும். அதேநேரம், இந்த உத்தரவு இந்த வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். அனைத்து வகையான விடுதிகளுக்கும் கண்ணை மூடிக் கொண்டு இந்த உத்தரவை அமல்படுத்தக் கூடாது. மனுதாரா்களை போல, அந்த விடுதிகளில் சேவை வழங்கப்படுகிா? என்பது உறுதி செய்த பின்னரே அதிகாரிகள் வரிகள் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com