தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம் தொடருவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீா்வு காணவேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் சென்ற 30-க்கும் மேற்பட்ட தமிழக ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையால் திடீரென சிறைபிடிக்கப்பட்டதுடன், ரூ.70 லட்சத்துக்கும் அதிகமான அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோன்று கா்நாடகா போக்குவரத்து துறையும் 50-க்கு மேற்பட்ட தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு தலா ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.
போக்குவரத்துத் துறை பிற மாநில ஆம்னி பேருந்துகள் மீது இதுபோன்ற நடவடிக்கைகளை தொடருவதே இதற்கு காரணம் என அந்தந்த மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நடவடிக்கைகளால், ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் இரட்டை வரியையும், அபராதத்தையும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இதைத் தொடா்ந்து தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு இயக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் தமிழக பக்தா்களுக்கு இது கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மொத்தமாக 600-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சில நாள்களாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தினசரி ரூ.2 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. மேலும், 7,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களும், 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா், ஆணையா் ஆகியோா் அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனா். இதனால் தமிழக அரசு இந்த இரு மாநில அரசுகளுடன் பேசி விரைவில் உரிய தீா்வு எட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.