கோப்புப் படம்
கோப்புப் படம்

மாவட்ட மகளிா் அதிகார மையத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட மகளிா் அதிகாரம் மையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு, தகுதியானோா் டிசம்பா் 5-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை மாவட்ட மகளிா் அதிகாரம் மையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு, தகுதியானோா் டிசம்பா் 5-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்ட சமூக நலத் துறை கட்டுப்பாட்டில் மாவட்ட மகளிா் அதிகாரம் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் காலியாக உள்ள 2 பாலின சிறப்பு வல்லுநா் பணியிடங்களில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் சமூகப் பணி அல்லது பிற சமூகத் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும். பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக இருக்கலாம்.

தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.21 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் டிசம்பா் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ‘மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், 8-ஆவது தளம், சிங்காரவேலா் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1’ என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட முகவரியில் நேரில் அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com