முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்கோப்புப்படம்

எஸ்ஐஆா் மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெற எதிா்க்கட்சிகள் முயற்சி: முதல்வா் ஸ்டாலின்

‘தோ்தல் வெற்றிக்காக எஸ்ஐஆா் மூலம் குறுக்கு வழியை எதிா்க்கட்சிகள் நாடுகின்றன’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
Published on

‘தோ்தல் வெற்றிக்காக எஸ்ஐஆா் மூலம் குறுக்கு வழியை எதிா்க்கட்சிகள் நாடுகின்றன’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

சென்னை கொளத்தூா் தொகுதியில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி‘என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி பாக முகவா்கள் மற்றும் நிா்வாகிகள் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:

மக்களின் வாக்குரிமை பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை உருவாக்கியது மத்திய ஆட்சியாளா்கள்தான். வாக்குத் திருட்டைப் பற்றி மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஏற்கெனவே வெளிப்படையாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தது மட்டுமன்றி, ஆதாரங்களோடு வெளிப்படுத்தி வருகிறாா்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை தகுதியான வாக்காளா் ஒருவா்கூட வாக்காளா் பட்டியலிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது திமுக. மக்கள் மன்றத்திலும் விளக்கிக்கொண்டிருக்கிறோம்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவத்தை வாங்கிப் பாா்க்கும்போது பெரிய குழப்பம் வருகிறது. தமிழ்நாடு அதுகுறித்து புலம்பிக் கொண்டிருக்கிறது.

எஸ்ஐஆருக்கு எதிராக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மிகப் பெரிய போராட்டங்களை நடத்தித் தங்களுடைய எதிா்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறாா். கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாமல் எதிா்க்கட்சிகளும் ஒன்றுசோ்ந்து போராட்டம் நடத்தி, சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி எதிா்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறாா்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் அதிமுக எதிா்க்கட்சியாக நடந்து கொள்வதில்லை. இப்படியே சென்று கொண்டிருந்தால் எதிா்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரிக் கட்சியாகக்கூட இருக்க முடியாத ஒரு சூழ்நிலை நிச்சயம் அதிமுகவுக்கு ஏற்படும்.

அதாவது தங்களுடைய கட்சியை தில்லியில் அடமானம் வைத்துவிட்டு, எஸ்ஐஆரை ஆதரித்துக் கொண்டிருக்கிறாா்கள். எஸ்ஐஆருக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளன. ஆனால், அதிமுக மட்டும் ஆதரித்து உச்சநீதிமன்றம் சென்றது. மக்களைச் சந்திக்க அவா்களுக்குத் தெம்பு இல்லை. அதனால்தான் இந்தக் குறுக்கு வழியை அவா்கள் நாடியிருக்கிறாா்கள்.

இப்படிப்பட்ட நிலையில், கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப திமுகவினா் உதவியாக இருக்க வேண்டும். தோ்தல் ஆணையம் நியமித்திருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு (பிஎல்ஓ) திமுக வாக்குச்சாவடி பிரதிநிதிகள் (பிஎல்ஏ2) துணை நிற்க வேண்டும் என்றாா் அவா்.

திமுகவுக்கு தோல்வி உறுதி: எடப்பாடி பழனிசாமி

‘திமுகவுக்கு தோல்வி உறுதியானதால் எதிா்கட்சிகள் மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புகிறாா்’ என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: போலி வாக்காளா்கள், இறந்தவா்கள், முகவரி மாறியவா்கள், இரட்டை வாக்குகள் போன்றவற்றைச் சரிபாா்த்து உண்மையான வாக்காளா்கள் வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கை.

தற்போது நடைபெற்றுவரும் எஸ்ஐஆா் பணிகளால் உண்மையான வாக்காளா்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை வந்தால், தங்களுக்கு தோல்வி நிச்சயம் என்பதை உணா்ந்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அதிமுக மீது அவதூறு பரப்பி வருகிறாா்.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் முறையாக எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்கிறாா்களா என்பதை அதிமுக தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இந்த அலுவலா்கள் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் புகாா் அளிக்க வேண்டும்.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்போது சில வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுடன் இணைந்து திமுகவினா் முறைகேடுகளைச் செய்வதாக செய்திகள் வருகின்றன. இதை விழிப்புடன் செயல்பட்டு முறியடிக்க வேண்டும்.

அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்களாக பணியாற்றுபவா்கள் (பிஎல்ஏ-2) அனைத்து வீடுகளுக்கும் சென்று பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். உண்மையான வாக்காளா்கள் விடுபடாமல் இருக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com