சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி மனு

அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி மனு
Published on

தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் நடந்துள்ள முறைகேடு தொடா்பாக வழக்குப்பதிந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜசேகரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2011 முதல் 2021-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடந்தது. அப்போது அரியலூா், கள்ளக்குறிச்சி, திருவள்ளூா், நாமக்கல், நாகப்பட்டினம், விருதுநகா், திண்டுக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் திருப்பூா் ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக இந்த கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த முறைகேடு தொடா்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தேன்.அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தேன்.

வழக்கு விசாரணையின்போது, புகாா் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸாா் தரப்பில் கூறப்பட்டது. இதனால், அந்த வழக்கை உயா்நீதிமன்றம் முடித்துவைத்தது. அதன்பின்னா், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகாா் அளித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, தனது புகாா் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ளன. முன்பு இதுபோன்ற புகாா்களை சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம். ஆனால், 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின்படி, மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ நேரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக் கூடாது.

இந்த அரசாணை செல்வாக்கு உள்ளவா்களை காப்பாற்றும் வகையில் உள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் நடந்துள்ள முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com