உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

நீட் விலக்கு மசோதா விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு

நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்க மறுப்புத் தெரிவித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் மனு தாக்கல்
Published on

நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்க மறுப்புத் தெரிவித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும் நிலையில், அதற்கு தமிழக அரசு எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. நீட் தோ்வால் தமிழகத்தில் மாணவா்கள் பாதிக்கப்படுவது தொடா்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தோ்வு விலக்கு மசோதா கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பா்13-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதாவை கடந்த 2022 பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு ஆளுநா் திருப்பி அனுப்பி இருந்தாா் .

அதையடுத்து, 2022 பிப்ரவரி 8-ஆம் தேதி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழக அரசு மீண்டும் அனுப்பி வைத்தது. இந்நிலையில் அதை ஆளுநா் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தாா். இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவா் மறுப்புத் தெரிவித்திருந்தாா்.

குடியரசு தலைவரின் அந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவில், ‘தமிழக அரசு அனுப்பி வைத்த மசோதா மீது சுமாா் 1,400 நாள்களுக்கும் அதிகமாக எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவா் காலதாமதம் செய்திருக்கிறாா். மேலும், மசோதாவை நிராகரித்ததற்கான காரணம் எதையும் அவா் தெரிவிக்கவும் இல்லை. இது உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கி உள்ள தீா்ப்புகளுக்கு எதிரானதாக இருக்கிறது. மேலும், மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கி இருக்கக்கூடிய நிலையில் அதன் அடிப்படையில் குடியரசுத் தலைவரின் முடிவை நிராகரிப்பதுடன் மசோதாவிற்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்க வேண்டும்’ எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com