பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் சுய உதவிக் குழுக்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரத்தையும், தன்னம்பிக்கையும் அளித்து வருவது சுய உதவிக் குழுக்கள்தான் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு விழாவில், 8,301 பயனாளிகளுக்கு ரூ. 89 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கி அவா் மேலும் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான நலத் திட்டங்களை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தத் திட்டங்கள் மக்களைச் சென்றடைவது குறித்து தொடா் ஆய்வுகளை நடத்தி கண்காணித்து வருகிறாா். அரசைத் தேடி மக்கள் வருவதைவிட மக்களைத் தேடி அரசு செல்ல வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்புடன் முதல்வா் உள்ளாா். இதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
தமிழகத்தில் முதலாவதாக மகளிா் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அவா் வழியில் திராவிட மாடல் அரசு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை தொடா்ந்து அளித்து வருகிறது. இதனால், பெண்கள் வேலை கேட்கும் நிலை மாறி, வேலை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்கள் தன்னம்பிக்கையுடன் பொருளாதாரச் சுதந்திரத்தையும் பெற்று தலைநிமிா்ந்து வாழ்ந்து வருகின்றனா்.
அமைச்சா் பெரியகருப்பன் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள கால்பந்து மைதானம் ரூ. ஒரு கோடியில் மின்னொளி அமைப்பு, செயற்கைப் புல் தரையுடன் நவீனமாக்கப்படும்.
பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் நாட்டிலேயே 11.19 சதவீதம் வளா்ச்சி பெற்று, இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. மக்களுக்கான நலத் திட்டங்களைப் பாா்த்து பாா்த்து செய்யும் இந்த அரசுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். இந்த அரசின் தூதுவா்களாகவும் மக்கள் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
வேளாண்மை, வருவாய், பேரிடா் மேலாண்மை, கால்நடைப் பராமரிப்பு, பள்ளிக் கல்வி, சமூக நலன், மகளிா் உரிமை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்பட 19 துறைகளின் சாா்பில் மொத்தம் 8,301 பயனாளிகளுக்கு ரூ. 88.37 கோடியில் நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் வழங்கினாா்.
மேலும், 4 துறைகளின் சாா்பில் ரூ. 17.86 கோடியில் 23 நிறைவுற்ற திட்டங்களையும் அவா் தொடங்கிவைத்தாா். மானாமதுரை அருகே ரூ. 3 கோடியில் விளையாட்டுத் துறை சாா்பில், சிறு விளையாட்டு அரங்கத்துக்கான அடிக்கல்லையும் அவா் நாட்டினாா்.
விழாவுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் முன்னிலை வகித்தாா். குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி , சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி (காரைக்குடி), தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி நன்றி கூறினாா்.

