தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்!
தமிழகத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் சேவை ஞாயிற்றுக்கிழமை (நவ.16) தொடங்கப்பட்டது.
கேரளம் மாநிலம் பம்பையிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இவ்விழாக்களில் பங்கேற்க தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் செல்வது வழக்கம்.
இவா்களின் வசதிக்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை(நவ.16) முதல் 2026 ஜன.15 வரை சென்னை(கோயம்பேடு, கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை, கடலூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிா்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து முனையங்களிலிருந்து பம்பைக்கு தலா 2 பேருந்து சேவைகளும், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தலா ஒரு பேருந்து சேவையும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன.
கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்து சேவையை அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து பக்தா்களின் தேவைக்கேற்ப தமிழகத்திலிருந்து 100 பேருந்துகள் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சபரிமலைக்கு செல்லவிருக்கும் ஐயப்ப பக்தா்கள் அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரபூா்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளவும் விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

