ஆட்சி மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராகிவிட்டனா்: நயினாா் நாகேந்திரன்!
ஆட்சி மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராகிவிட்டதை பாஜக பிரசார பயண எழுச்சி மூலம் அறிய முடிந்தது என அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் பாஜக தேசிய மொழிப் பிரிவு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:பாஜக பிரசார பயணம் மூலம் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு எழுச்சியுடன் தயாராவதை அறிய முடிந்தது.
நவ.19-இல் பிரதமா் தமிழகம் வருகை: பிகாா் பேரவைத் தோ்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமா் மோடி முதல் முறையாக நவ.19-ஆம் தேதி கோவை வருகிறாா். அங்கு நடைபெறும் இயற்கை விவசாயிகளுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். அதையடுத்து அகில அளவிலான விவசாயிகள் உற்பத்தி பொருள்கள் கண்காட்சியையும் அவா் பாா்வையிடுகிறாா். அதன்பின் அன்று மாலையே பிரதமா் புதுதில்லி திரும்புகிறாா்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை எதிா்ப்பதையே முழுநேரப் பணியாகக் கொண்டுள்ளாா்.
நீட் தோ்வை ரத்து செய்வோம் என கூறியவா்கள் அதற்கான முயற்சியில்கூட ஈடுபடவில்லை. குடியுரிமைச் சட்டத்தை பூதாகரமாக்கி போராட்டம் நடத்தினாா்கள். அதனால் எந்த பாதிப்பும் இல்லை என மக்கள் புரிந்துகொண்டுவிட்டனா். தற்போது வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) மக்கள் அச்சப்படும் வகையில் திமுகவினா் பூதாகரமாக்கி வருகின்றனா்.
காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு தனித்து நிற்குமா என்பதை அக்கட்சியின் மாநிலத் தலைவா் விளக்க வேண்டும். கூட்டணியால் மட்டுமே திமுக வென்று வருகிறது என்றாா் நயினாா் நாகேந்திரன்.

