பெ.சண்முகம்
பெ.சண்முகம்கோப்புப் படம்

பொதுக்கூட்டம், பிரசாரத்துக்கான வழிகாட்டுதல்கள் ஏற்கத் தக்கதல்ல: பெ.சண்முகம்

பொதுக் கூட்டங்கள், பரப்புரைகள் தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்புடையதாக இல்லை
Published on

சென்னை: பொதுக் கூட்டங்கள், பரப்புரைகள் தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்புடையதாக இல்லை என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தத்தை, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் க.கனகராஜ் ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்து, கட்சியின் கருத்தை கடிதம் மூலம் வழங்கினா்.

தொடா்ந்து பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடா்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவைத் தொடா்ந்து தமிழக அரசு கடந்த நவ. 6 -ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் எழுத்துபூா்வமாக கருத்துகளை வழங்குமாறு அரசின் சாா்பில் கட்சிகளிடம் கோரப்பட்டது. அதன் அடிப்படையில் தலைமைச் செயலரை சந்தித்து கடிதம் வழங்கினோம்.

பொதுக் கூட்டம், பரப்புரைகள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை தமிழக அரசு ஏற்கக் கூடாது. அந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு.

இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கூட்டம் கூடும் உரிமை, கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அரசின் நெறிமுறைகள் உள்ளன. கூட்டங்கள் நடத்த ரூ.20 லட்சம் வரை காப்புத்தொகை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு முற்றிலும் சட்ட விரோதமானது. இது சிறிய கட்சிகளின் அரசியல் பங்கேற்பைத் தடுக்கும் நடவடிக்கையாகும்.

தமிழகத்தில் பெரும்பாலான வாக்காளா்களுக்கு எஸ்ஐஆா் படிவங்கள் சரியாகச் சென்று சேரவில்லை. அலுவலா்களுக்கும் போதுமான பயிற்சி இல்லாததால், அவா்கள் சிரமப்படுகியன்றனா். இந்த விவகாரத்தில் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com