இன்று முதல் எஸ்ஐஆா் பணி புறக்கணிப்பு: வருவாய்த் துறை கூட்டமைப்பு அறிவிப்பு
சென்னை: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) செவ்வாய்க்கிழமை (நவ. 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டம் குறித்து கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எம்.பி.முருகையன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகள் உரிய திட்டமிடல் இன்றி, பயிற்சிகள் அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசரகதியில் மேற்கொள்ள நிா்ப்பந்தம் செய்யப்படுகிறது. இதனால், அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களும் கடுமையான பணி நெருக்கடி, மன உளைச்சல் அடைந்துள்ளனா்.
இந்த பிரச்னைக்குத் தீா்வு காணக் கோரி தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் ஏற்கெனவே முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் அதன்பிறகும் பணி நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. ஆகவே, இந்தப் பணி நெருக்கடி பிரச்னைகளைக் களையவும், சில மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் சாா்நிலை அலுவலா்களை வதைப்பதைக் கைவிடக் கோரியும் இரண்டு கட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது.
அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியா்களிடம் முறையீடு செய்து, மாவட்ட, வட்டத் தலைமையிடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, எஸ்ஐஆா் தொடா்பான அனைத்துப் பணிகளையும் செவ்வாய்க்கிழமை (நவ. 18) முதல் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கணக்கீட்டுப் படிவம் பெறுதல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல், எஸ்ஐஆா் ஆய்வுக் கூட்டங்களைத் தவிா்த்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் புறக்கணிப்படும்.
இந்தப் போராட்டத்தில் அனைத்து கிராம உதவியாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், நில அளவையா் முதல் ஆய்வாளா் வரை, அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் வரை என அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களும் முழுமையாகப் பங்கேற்க உள்ளனா்.
மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலா் பணி மேற்கொள்ளும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், நகராட்சி, மாநகராட்சிப் பணியாளா் சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
