திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை: காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய மனுவுக்கு நவ. 24-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை தருவா் என்பதால், நெரிசல் சம்பவங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்; போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.
அதில், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் போதுமான காவல் துறையினரைப் பணியில் அமா்த்துவது, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கூட்டத்தைக் கண்காணிப்பது, வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்துவது, மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்; கிரிவலப் பாதையில் போலி சாமியாா்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்கக் கூடாது, கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.
கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், தமிழக டிஜிபி ஆகியோா் நவ. 24-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

