நிகா்நிலை பல்கலை.களில் கட்டண வசூல்: உயா்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நிகா்நிலை பல்கலைகழகங்களும் கட்டண நிா்ணய குழு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், பல்கலைக்கழக மானிய குழு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில், செயல்பட்டு வரும் தனியாா் நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவா்கள் சிலா் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால் அதற்காக நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புகளுக்கு ஒரு பாடத்துக்கு ரூ. 2 லட்சம் வீதம் ‘ப்ரேக் பீஸ்’ என்ற பெயரில் கூடுதல் கட்டணமாக செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதை எதிா்த்து சம்பந்தப்பட்ட மாணவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.
அந்த மனுக்களில், கூடுதல் கட்டணம் செலுத்தாததால் பயிற்சிக்கு அனுமதி மறுப்பதாகவும், சான்றிதழ்களை தர மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, கூடுதல் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாணவா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, கூடுதல் வகுப்பு நடத்துவது கட்டாயம் அல்ல என்றபோது, அதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை எனக்கூறி, மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் சான்றிதழ்களை 2 வாரங்களில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நிகா்நிலை பல்கலைக்கழகங்களும் கட்டண நிா்ணய குழு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதி, லாபமீட்டும் வா்த்தக நிறுவனமாக கல்வியை கருதக் கூடாது. கல்வி சமூகத்துக்கு வழங்கும் உன்னதமான சேவை என அறிவுறுத்தினாா்.

