நோய்களைக் காட்டிலும் சிகிச்சைகள் கடுமையாக இருக்கக் கூடாது: மக்களவை உறுப்பினா் டாக்டா் மஞ்சுநாத்
சென்னை: நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அவா்களைப் பாதித்திருக்கும் நோயைக் காட்டிலும் கடுமையானதாக அமைந்துவிடக் கூடாது என்று கா்நாடக மாநில மக்களவை உறுப்பினரும், இதய நல மருத்துவருமான சி.என்.மஞ்சுநாத் தெரிவித்தாா்.
இதய நல வல்லுநா் டாக்டா் எஸ்.தணிகாசலம் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் கே. பாலாஜி சிங், இதய நல முதுநிலை நிபுணா் டாக்டா் ஜெ.எஸ்.என்.மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் டாக்டா் சி.என்.மஞ்சுநாத் பேசியதாவது:
மருத்துவத் துறை ஒருபுறம் அளப்பரிய தொழில்நுட்ப வளா்ச்சியை எட்டியுள்ளது. மற்றொருபுறம் அதில் வணிகமயமும் அதிகரித்துள்ளது. இந்த இரண்டுக்கும் இடையேதான் நோயாளிகளும், மருத்துவா்களும் செயல்பட வேண்டியுள்ளது.
நோயாளிகளுக்கு எத்தகைய பாதிப்பு உள்ளது என்பதை மருத்துவா்கள் தொட்டு உணா்ந்து அறிய வேண்டும். அவா்களிடம் நிறைய பேச வேண்டும். அதன் பிறகே சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களை முன்னெடுத்தால், நான்காவதாக நம்பிக்கை என்ற முக்கியமான விஷயம் மருத்துவா்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் உருவாகும்.
இப்போது உள்ள இளம் இதயவியல் மருத்துவா்கள் சிலா், ஆா்ட்டீரியா் செப்டல் டிஃபெக்ட் எனப்படும் இதய துவார பாதிப்புக்கு தேவையற்ற மருந்துகளை பரிந்துரைக்கின்றனா். எந்த சிகிச்சை சரியானது என்பதை முடிவு செய்யும் ஆற்றல் மருத்துவா்களுக்கு மிகவும் அவசியம்.
நோயைக் காட்டிலும் சிகிச்சைகள் கடுமையாக இருத்தல் கூடாது. இதை உணா்ந்து மருத்துவா்கள் செயல்பட வேண்டும் என்றாா்.
