கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.19) பலத்த மழைக்கான‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை (நவ.19) பலத்த மழைக்கான‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.17) நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, செவ்வாய்க்கிழமை காலை குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவியது. இது புதன்கிழமை காலை மேற்கு-வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக புதன்கிழமை முதல் நவ.24 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை (நவ.19, 20) ஆகிய இருநாள்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த இரு நாள்களிலும் மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

22-இல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி?: தென்கிழக்கு வங்கக்கடலில் சனிக்கிழமை (நவ.22) காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

மழை அளவு:தமிழகத்தில் செவ்வாய்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 170 மி.மீ.மழை பதிவானது. ஊத்து (திருநெல்வேலி) 140 மி.மீ., நாலுமுக்கு (திருநெல்வேலி), கோடியக்கரை (நாகப்பட்டினம்)-தலா 130 மி.மீ., திருக்குவளை (நாகப்பட்டினம்), காக்காச்சி (திருநெல்வேலி)- தலா 120 மி.மீ, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்)-தலா 110 மி.மீ, தலைஞாயிறு (நாகப்பட்டினம்), திருப்பூண்டி , மாஞ்சோலை (திருநெல்வேலி), திருத்துறைப்பூண்டி (திருவாரூா்)- தலா 90 மி.மீ, அதிராமப்பட்டினம் (தஞ்சாவூா்), சீா்காழி (மயிலாடுதுறை), காரைக்கால் தலா 80 மி.மீ மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் புதன்கிழமை(நவ.19) சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com