இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து மனுவை நிராகரித்த உத்தரவு ரத்து
இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து கோரிய மனுவை நிராகரித்த அம்பத்தூா் குடும்பநல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த கணவன்-மனைவி திருமணமாகி சில மாதங்களுக்குப் பிறகு பரஸ்பரம் விவாகரத்து கோரி அம்பத்தூா் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு விசாரணையின்போது, ஆவணங்களை ஆய்வு செய்த குடும்ப நல நீதிமன்றம், கணவன் இந்து, மனைவி முஸ்லிம் மதங்களைச் சோ்ந்தவா்களாக இருப்பதால், பரஸ்பர விவாகரத்து வழங்க முடியாது எனக்கூறி தீா்ப்பளித்தது.
இந்த தீா்ப்பை எதிா்த்து கணவன், மனைவி இருவரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இதனை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி பிறப்பித்த தீா்ப்பில், இந்த வழக்கில் விவாகரத்து கோரியுள்ள மனைவி, பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும், அவா் இந்து முறைப்படிதான் வாழ்ந்து வந்துள்ளாா்.
கணவன், மனைவி இருவரும் இந்து முறைப்படி கோயிலில் திருமணம் செய்தது ஆதாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தகவல்களை அம்பத்தூா் நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னரும், அதை ஏற்க மறுத்தது தவறானது.
எனவே, அந்த பெண் முஸ்லிம் எனக்கூறி அவரது விவாகரத்து மனுவை ஏற்க மறுத்தது தவறானது. எனவே, இந்த கணவன் மனைவி விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை அம்பத்தூா் குடும்ப நல நீதிமன்றம் மீண்டும் விசாரித்து, 4 வாரங்களுக்குள் இறுதி தீா்ப்பளிக்க வேண்டும், என நீதிபதி உத்தரவிட்டாா்.

