Madras High Court questions police
சென்னை உயர்நீதிமன்றம்

கோயில் செயல் அலுவலா்கள் நியமன உத்தரவுகளை வெளியிடக் கோரிய வழக்கு: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோயில்களின் செயல் அலுவலா்கள் நியமன உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றக் கோரிய வழக்கில் இந்துசமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

தமிழகத்தில் உள்ள கோயில்களின் செயல் அலுவலா்கள் நியமன உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றக் கோரிய வழக்கில் இந்துசமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் டி.ஆா்.ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 45,809 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களை 668 செயல் அலுவலா்கள் நிா்வகித்து வருவதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையா் அளித்திருந்த பதிலில், 3250 செயல் அலுவலா்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் நியமிக்கப்பட்டுள்ள செயல் அலுவலா்கள் நியமன உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இந்துசமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துசமய அறநிலையத்துறை தரப்பில், கடந்த 2022-ஆம் ஆண்டு இதே கோரிக்கையுடன் மனுதாரா் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறாா். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு இந்துசமய அறநிலையத் துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com