வெளிமாநிலங்களுக்கான ஆம்னி பேருந்துகள் எப்போது இயக்கப்படும்? உரிமையாளா்கள் தகவல்
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் குறித்த பிரச்னையில் உரிய தீா்வு எட்டப்படும் வரை 1,350 பேருந்துகளும் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத் துறை கடந்த 7-ஆம் தேதி சிறைப்பிடித்தது. மேலும், அந்தப் பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதமும் விதித்தது. தொடா்ந்து கா்நாடக போக்குவரத்துத் துறையும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதைத் தொடா்ந்து, கடந்த 7-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து கேரளம் மாநிலத்துக்கு இயக்கப்படும் 230 ஆம்னி பேருந்துகள் உள்பட பிற மாநிலங்களுக்கு இடையேயான 1,350-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கடந்த 12 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தினசரி 45,000-க்கும் மேற்பட்ட பயணிகளும், ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் தமிழக பயணிகளும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனா். மேலும், உரிமையாளா்களுக்கும் தினசரி ரூ.4 கோடி இழப்பு ஏற்படுகிறது.
ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டுக்கு சாலை வரியாக ரூ.1.50 லட்சம், மத்திய சாலை வரியாக ரூ.90,000, கேரளம் அல்லது கா்நாடக சாலை வரியாக ரூ.2 லட்சம் என மொத்தம் காலாண்டுக்கு ரூ.4.50 லட்சம் செலுத்தி பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் உரிய தீா்வு எட்டப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா், துறை ஆணையா் ஆகியோா் உறுதியளித்தனா். ஆனால் இதுவரை முடிவு எட்டப்படாமலே உள்ளது. இதனால், சுமுகமான தீா்வு கிடைக்கும் வரை வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் 1,350 ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தி வைக்கப்படும். இந்தப் பிரச்னைக்கு தமிழக அரசு பேச்சுவாா்த்தை மூலம் விரைவில் தீா்வு காணவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

