

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. அவற்றில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது.
பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டு, வாக்காளர்களின் முகவரி உள்ளிட்ட தகவல்கள் உறுதி செய்வதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பணிக்காக ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பில் கலெக்டர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போன்றோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைவிட கூடுதலாகப் பொறுப்புகள் வழங்கப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக செயல்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த நவ. 4 ஆம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் வருகிற டிச. 4 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.
2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தற்போது சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு (6 கோடிக்கும் மேலான) வாக்காளர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பணி நெருக்கடி காரணமாக, வாக்காளர் திருத்தப் பணிகளை நேற்று முதல் வருவாய் துறை சங்கம் புறக்கணிப்பதாகத் தெரிவித்தது.
இந்த நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு இன்று (நவ.19) அறிவிப்பானை வெளியிட்டுள்ளது.
சம்பள உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், “வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து இரு மடங்காக ரூ.12000 ஆக உயர்த்தப்படுகிறது.
அதோடு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆகவும், வாக்குச் சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-ல் இருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.