பிளஸ் 2 மாணவி கொலை: தலைவா்கள் கண்டனம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சிகளின் தலைவா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): ராமேவரத்தில் பிளஸ் 2 மாணவியை இளைஞா் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவிக்குக்கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கும், பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாததே குற்றச் செயல்களுக்கு முழுமுதல் காரணம்.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியையும், மனவேதனையையும் அளிப்பதாக உள்ளது. மாணவி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். பள்ளிகள் உள்ளிட்ட வெளியிடங்களுக்குச் சென்றுவரும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. திமுக ஆட்சியில் குற்றச் சம்பவங்களில் கைதுகள் அதிகரித்துள்ளதே தவிர, குற்றங்கள் குறைந்தபாடில்லை. திமுக ஆட்சிக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி விரைவில் கடிவாளமிடும்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): பள்ளி செல்லும் மாணவியரும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடா்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதால் பள்ளி, அலுவலக நேரங்களில் அப்பகுதிகளில் போலீஸாா் போதிய பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற குழலில் உருவாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இச்சம்பவத்தில் குற்றவாளிக்கு தகுந்த தண்டையை போலீஸாா் பெற்றுத்தர வேண்டும்.
ஆதவ் அா்ஜுனா (தவெக): மது, போதைப் பொருள்கள் பயன்பாடு, ஆயுத கலாசாரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் சட்டம்-ஒழுங்கு தோல்வியாகவே இதைப் பாா்க்க வேண்டியுள்ளது. மாணவி கொலையில், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
