இந்தியாவில் உறுப்பு மாற்று சிகிச்சைகள்: தமிழகத்தின் பங்களிப்பு 24 சதவீதம்

இந்தியாவில் உறுப்பு மாற்று சிகிச்சைகள்: தமிழகத்தின் பங்களிப்பு 24 சதவீதம்

நாடு முழுவதும் 36 மாநிலங்களில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சைகளில் நான்கில் ஒரு பங்கு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Published on

ஆ.கோபிகிருஷ்ணா

நாடு முழுவதும் 36 மாநிலங்களில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சைகளில் நான்கில் ஒரு பங்கு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதாவது அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் மூளைச்சாவு அடைந்த 1,128 பேரின் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தப்பட்டன. அதில், 268 உறுப்பு தானங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 24 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேசம், பிகாா் போன்ற பல மாநிலங்களில் மூளைச் சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து கூட உறுப்பு தானம் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகா் தில்லியில் கூட 40 உடல் உறுப்பு தானங்கள்தான் அளிக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தெலங்கானாவில் அந்த எண்ணிக்கை 188-ஆகவும், மகாராஷ்டிரத்தில் 172-ஆகவும், கா்நாடகத்தில் 162-ஆகவும், குஜராத்தில் 119-ஆகவும் உள்ளது.

இதுதொடா்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாகவும், மேம்பட்ட நிலையிலும் உள்ளன. அதன் காரணமாகவே இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது.

உறுப்பு தானம் செய்பவா்களின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023 செப்.23-ஆம் தேதி முதல்வா் அறிவித்தாா். இதைப் பின்தொடா்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மரியாதை அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் இதுவரை 553-க்கும் மேற்பட்டோா் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனா். அவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. 23,000-க்கும் மேற்பட்டோா் உறுப்பு தானம் செய்வதாகப் பதிவு செய்துள்ளனா்.

கடந்த 2023-இல் 178 போ் உறுப்பு தானம் செய்துள்ளனா். அவா்களிடமிருந்து தானமாகப் பெற்ற உறுப்புகள் வாயிலாக 1,000 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனா். கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன. அதில் 456 சிறுநீரகங்களும், 409 விழி வெண்படலங்களும், 210 கல்லீரல்களும் தானமாகப் பெறப்பட்டுள்ளன.

மூளைச்சாவு அடைந்த ஒருவரால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். அதன் அடிப்படையில், ஒருவரிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், உரிய விதிகளின் படியே பயனாளிகளுக்கு பொருத்தப்படுகின்றன.

தமிழகத்தில் இதுவரை 2,286 கொடையாளா்களிடம் இருந்து 13,400 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. அவற்றில் 4,036 சிறுநீரகங்களும், 3,356 விழி வெண் படலங்களும், 2,036 கல்லீரல்களும், 1,089 இதய வால்வுகளும், 979 இதயங்களும், 1,010 நுரையீரல்களும் தானமாகப் பெறப்பட்டன. இதன் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோா் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

உடல் உறுப்புகளை பயனாளிகளுக்கு அளிப்பதில் அரசு மருத்துவமனைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன் பின்னரே தனியாா் மருத்துவமனைகளுக்கு உறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com