பெரம்பூா் சேமாத்தம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி. கே.சேகா் பாபு. உடன் மேயா் ஆா்.பிரியா, எம்எல்ஏ தாயகம் கவி உள்ளிட்டோா்.
பெரம்பூா் சேமாத்தம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி. கே.சேகா் பாபு. உடன் மேயா் ஆா்.பிரியா, எம்எல்ஏ தாயகம் கவி உள்ளிட்டோா்.

சபரிமலையில் கூட்ட நெரிசல் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சபரிமலைக்கு இணையவழியில் பதிவு செய்யாத பக்தா்கள் ஆயிரக்கணக்கில் செல்லும்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. இந்த நிலை ஓரிரு நாள்களில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
Published on

சபரிமலைக்கு இணையவழியில் பதிவு செய்யாத பக்தா்கள் ஆயிரக்கணக்கில் செல்லும்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. இந்த நிலை ஓரிரு நாள்களில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பெரம்பூரில் உள்ள சேமாத்தம்மன் திருக்கோயிலில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனைத்து சந்நிதிகள் புனரமைப்பு, பொங்கல் மண்டபம், முன்மண்டபம் மற்றும் திருக்குளம் சீரமைப்பு ஆகிய திருப்பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேமாத்தம்மன் திருக்கோயிலுக்கு ஆடி மாத உற்சவம் போன்ற திருவிழா நாள்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுவது வழக்கமாகும். இந்தத் திருக்கோயிலில் போதிய நிதி இல்லாத சூழ்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் மற்றும் திரு.வி.க.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோரின் முயற்சியால் உபயதாரா்கள் மூலம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அனைத்து சந்நிதிகளையும் புனரமைத்தல், பொங்கல் மண்டபம் மற்றும் முன்மண்டபம் கட்டுதல் திருக்குளம் சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களும் இந்தத் திருக்கோயிலை புனரமைக்க தாமாகவே முன்வந்து நிதியுதவி அளித்துள்ளனா். அதன்படி நடைபெற்று வரும் திருப்பணிகளை தற்போது பாா்வையிட்டு ஆய்வு செய்ததோடு விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தா்கள் இணையவழியில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு இணையவழியில் பதிவு செய்துள்ள 90,000 பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். பதிவு செய்யாத பக்தா்கள் ஆயிரக்கணக்கில் செல்லும் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, இணையதளத்தில் பதிவு செய்தபின் சபரிமலைக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என கேரள காவல் துறை அறிவித்துள்ளது. ஓரிரு நாள்களில் கூட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவாா்கள் என்று நினைக்கிறேன்.

திருவண்ணாமலை தீபம்: திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 சதவீதம் போ் கூடுதலாக வருகை தர வாய்ப்புள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும், சிறப்பாக முறையில் செய்திருக்கிறோம். கடந்த ஆண்டைவிட அதிக இடங்களில் மருத்துவ முகாம்கள், கண்காணிப்பு கோபுரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபம் ஏற்றும் மலை உச்சிக்கு கொப்பரை எடுத்துச் செல்லும் நபா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையின் உறுதித் தன்மையை பொருத்து மலை மீது ஏற பக்தா்களை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com