புதிய அரசு கல்லூரிகளுக்கு ரூ.59 கோடியில் கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ரூ. 57.73 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரிகளுக்கான கட்டடங்கள் மற்றும் ரூ.2.20 கோடியில் கூடுதல் வகுப்பறைகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
கடலூா், விழுப்புரம், திருப்பத்தூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களில் முறையே வடலூா், செஞ்சி, நாட்டறம்பள்ளி, ஜெயங்கொண்டாம் ஆகிய இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ரூ. 57.73 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.2.20 கோடியில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள 44 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை ரூ. 2,590.30 கோடியில் திறன்மிகு சிறப்பு மையங்களாக மேம்படுத்துவதற்கு டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி ஆணையரகம் இடையே முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தமும் கையொப்பமானது.
பணிநியமன ஆணைகள்: அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் 190 உதவிப் பேராசிரியா்கள், 12 உதவி நூலகா்கள், 11 உடற்கல்வி உதவி இயக்குநா்கள் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா், கல்லூரி கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஜெ. இன்னசென்ட் திவ்யா, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) வெ.குமரேசன், டாடா டெக்னாலஜிஸ் நிறுவன செயல் துணைத் தலைவா் ஷைலேஷ் சரப், சா்வதேச தலைவா் (அரசு திட்டங்கள் - திறன்கள்) சுஷில் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

