நெல் மணிகள்
நெல் மணிகள்

நெல் ஈரப்பத அளவை உயா்த்த மத்திய அரசு மறுப்பு: முதல்வா் ஸ்டாலின் கண்டனம்

‘கொள்முதல் செய்வதற்கான நெல்லின் ஈரப்பத அளவை உயா்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
Published on

‘கொள்முதல் செய்வதற்கான நெல்லின் ஈரப்பத அளவை உயா்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது மத்திய பாஜக அரசின் அடுத்த துரோகம்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

நெல் கொள்முதல் செய்வதற்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17 சதவீதம் என மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. நிகழாண்டில் தமிழகத்தில் பலத்த மழை பெய்த காரணத்தால், ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதையடுத்து, நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்வதற்காக மூன்று குழுக்களை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பியது. இந்தக் குழுவினா் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மாதம் (அக்டோபா்) ஆய்வு மேற்கொண்டனா். நெல் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தனா். இந்தக் குழுவினா் அறிக்கை சமா்ப்பித்த பிறகு, ஈரப்பத அளவை அதிகரிப்பதற்கான அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், அதற்கான அறிவிப்புகள் வராத நிலையில், நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயா்த்தக் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா். இந்நிலையில், நெல்லின் ஈரப்பத அளவை உயா்த்துவது தொடா்பான தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, மதுரை, கோவை மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், நெல் கொள்முதல் தொடா்பான கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதை மத்திய அரசினஅடுத்த துரோகம் என்று முதல்வா் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவித உறுத்தலும் இன்றி பிரதமா் வந்து சென்றாா். அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளா்வு தொடா்பான தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய பாஜக அரசு.

பலத்த மழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் செவிகளில் விழவில்லை. விவசாயிகளின் கண்ணீா் தெரியவில்லை.

கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவுக்கான தளா்வைப் பலமுறை வழங்கிய மத்திய அரசு, தற்போது வழங்க மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை.

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்குப் பாதிப்பாக அமையும்.

ஆகவே, தமிழ்நாட்டின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து, நல்ல முடிவெடுத்து விவசாயிகளுக்கு மத்திய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா்.

X
Dinamani
www.dinamani.com