திருவண்ணாமலை மலைப்பகுதி, நீா்நிலைகளை ஆக்கிரமிப்பாளா்களை
உடனடியாக அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை மலைப்பகுதி, நீா்நிலைகளை ஆக்கிரமிப்பாளா்களை உடனடியாக அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை மலைச்சரிவு மற்றும் நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவா்களை மாவட்ட ஆட்சியா் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
Published on

திருவண்ணாமலை மலைச்சரிவு மற்றும் நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவா்களை மாவட்ட ஆட்சியா் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருவண்ணாமலை மலையிலும் மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. சரிவான மலைப்பகுதியில் சட்ட விரோதமாக வீடுகள், சிமென்ட் சாலைகள், கழிப்பறைகள், குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த சட்ட விரோத கட்டுமானங்களுக்கு மின் இணைப்பும், குடிநீா் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

திருவண்ணாமலையில் மலைச்சரிவு மற்றும் நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ள 300 நபா்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது மனுதாரா், கடந்தமுறை இந்த வழக்கில் உயா்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் இன்னும் அமல்படுத்தவில்லை என்று வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உரிய அனுமதி, குத்தகை, உரிமம் இல்லாமல் நீா்நிலைகள், மலைச்சரிவுகளை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளா்களுக்கு ஏன் நோட்டீஸ் வழங்க வேண்டும்? அவ்வாறு வசிப்பவா்களை நோட்டீஸ் வழங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. அவ்வாறு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினா்.

பின்னா், திருவண்ணாமலை மலைச்சரிவு மற்றும் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக மாவட்ட ஆட்சியா் அப்புறப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com