இந்தியாவிடம் போதிய அளவில் அந்நிய செலாவணி கையிருப்பு: ரிசா்வ் வங்கி ஆளுநா்
இந்தியாவிடம் போதிய அளவில் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவ.7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 269.9 கோடி டாலா் குறைந்து 68,703 கோடி டாலராக சரிந்ததாக ரிசா்வ் வங்கி தரவுகளில் குறிப்பிடப்பட்ட நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
தில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் சாா்பில் நடத்தப்பட்ட விகேஆா்வி.ராவ் நினைவு உரை நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சய் மல்ஹோத்ராவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்குப் பதிலளித்து அவா் பேசியதாவது: நாட்டில் நிதி நிலைத்தன்மையை உறுதிபடுத்துவதே ரிசா்வ் வங்கியின் முதன்மைப் பணியாகும். வங்கிகள் தொடா்புடைய விதிகளை எளிமைப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடைமுறைகளால் அண்மைக்காலமாக இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது.
அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரிக்கும்போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறது. அதேபோல் ரூபாய்க்கான தேவை அதிகரித்தால் டாலா் மதிப்பு வீழ்ச்சியடையும்; ரூபாய் மதிப்பு அதிகரிக்கும்.
சிறந்த 100 வங்கிகள்:
தற்போது பொதுத் துறை மற்றும் தனியாருக்குச் சொந்தமான பல வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளா்ச்சியடைந்து வருவதால் உலகளவில் சிறப்பான 100 வங்கிகளின் பட்டியலில் இடம்பெறும் இந்திய வங்கிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.
தற்போது உலக அளவில் சிறப்பாக செயல்படும் 100 வங்கிகளின் பட்டியலில் 43-ஆவது இடத்தில் பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்பிஐ) 73-ஆவது இடத்திலும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் உள்ளது.

