சென்னையில் ரூ. 89.70 கோடி மதிப்பிலான 584 குடியிருப்புகள் திறப்பு!

சென்னையில் ரூ. 89.70 கோடி மதிப்பில் 584 குடியிருப்புகளை துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்து பற்றி...
Udhayanidhi inaugurated 584 apartments worth Rs. 89.70 crores in Chennai
சென்னையில் ரூ. 89.70 கோடி மதிப்பில் 584 குடியிருப்புகளை திறந்துவைத்தார் உதயநிதி!
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில்
89.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 584 குடியிருப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கலைஞர் தமிழ்நாட்டில் குடிசை பகுதிகளே இருக்கக்கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையோடு 1970 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி ஏழை எளிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தந்தார்.

அவரது வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு குடிசை மாற்று வாரியம் என்பதை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக உயர்த்தியதோடு, அனைத்து குடியிருப்பு வளாகங்களிலும், சாலை, குடிநீர், கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வழங்கி வருகின்றார். 

எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேம்புலி அம்மன் கோயில்  திட்டப்பகுதியில் 1976 ஆம் ஆண்டு 295 சதுர அடியில் தரை  மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 144   குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத்  தகுதியற்ற நிலையில் இருந்தது. 

முதலமைச்சர் உத்தரவின்படி, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் வேம்புலியம்மன் கோயில் தெரு  திட்டப்பகுதியில்  தூண் மற்றும் 9 தளங்களுடன்  32 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் 188 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. 

வேம்புலியம்மன் கோயில் தெரு திட்டப்பகுதி குடியிருப்பில் குடியிருந்த 144 குடியிருப்புவாசிகளுக்கும், வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை,  வெளியில் தங்கியிருப்பதற்காக 24 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 

மேலும் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சென்னையில்,  மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  சீனிவாசபுரம் பகுதி – 1 திட்டப்பகுதியில்  57 கோடியே 07 இலட்சம் ரூபாய் செலவில் தூண் மற்றும் 14 தளங்களுடன்  396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 

இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.  மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள்  அமைக்கப்பட்டுள்ளன. மேலும் “நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் உத்தரவின்படி, அனைத்து வீடுகளும் மகளிருடைய பெயரிலேயே பதிவு செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (21.11.2025) சென்னை ஹாரிங்டன் சாலை வேம்புலி அம்மன் திட்டப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வேம்புலி அம்மன் கோயில் மற்றும் சீனிவாசபுரம் பகுதி-1 ஆகிய திட்டப் பகுதிகளில் மொத்தம் 89.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 584 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

 முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள் வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 166 திட்டப் பகுதிகளில் 6363.19 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்பட்ட 55,831 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய  மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும்   திறந்து வைக்கப்பட்டுள்ளன

தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி.ஆர். என். கார்டன் திட்டப் பகுதியில் 85.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 501 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியினையும்,  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, செட்டித் தோட்டம் திட்டப் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 45.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 243 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியினை  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட எல்லீஸ்புரம் திட்டப் பகுதியில் 15.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 85 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது குறித்த காலத்திற்குள் கட்டுமான பணிகளை முடித்து குடியிருப்புகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதற்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைந்து நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,  பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா உள்ளிட்டோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Summary

Udhayanidhi inaugurated 584 apartments worth Rs. 89.70 crores in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com