

விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமோ ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 ஆண்டு காலமாக மசோதாவை ஆளுநர் நிலுவையில் வைத்து வந்துள்ளார். கிடப்பில் போடப்படும் மசோதாவை நிறைவேற்ற கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்படவேண்டும் என்று தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விளக்கம்தான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.
வழக்குக்குத் தீர்ப்பு கொடுக்கவில்லை. அந்த வழக்கில் தடை தவறு என எதனையும் சொல்லவும் இல்லை. காலக்கெடு கொடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதைத் தான் நீதிமன்றம் சொல்லி உள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதனை செய்து கொடுங்கள் எனதான் சொல்லி உள்ளார்கள். கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட டிபிஆர்ஐ மத்திய அரசு நிராகரித்து உள்ளது. ஆனால் அதனை நிராகரிக்கவில்லை என பாஜக சொல்லி வருகிறது. மத்திய அமைச்சர் நிராகரித்ததாக சொல்கிறார். ஆனால் தமிழக பாஜகவினர் அதனை நிராகரிக்கவில்லை திருப்பிதான் அனுப்பப்பட்டுள்ளது என சொல்லி வருகிறார்கள். யார் சொல்வதை நம்புவது.
தமிழக அரசால் கொடுக்கப்பட்ட மெட்ரோ திட்ட டி. பி ஆர் இல் பல இடங்கள் பாதிக்கப்படும் எனவும் அளவீடுகள் குறைவாக உள்ளது என்பதை சுட்டி காட்டித்தான் திருப்பி அனுப்பி உள்ளதாக பாஜகவினர் விமர்சனம் செய்கிறார்கள். அதனை எல்லாம் மத்திய அரசு சொல்லக்கூடாது இலவசமாக ஒன்றும் மெட்ரோ திட்டத்தை அவர்கள் தரவில்லை. 50 சதவீத பங்கை மட்டும் தான் அவர்கள் தருகிறார்கள். சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆறு ஆண்டுகள் எதனையும் செய்யாமல் இருந்த சூழலில் தான் தமிழக அரசு ஆறில் ஐந்து பங்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த வங்கியில் கடன் தான் வாங்கி உள்ளோம்.
அதனையே மத்திய அரசு சொல்லி தான் வாங்கி உள்ளோம் என சொன்னால் அதில் என்ன நியாயம் உள்ளது. ஒரு பங்கு தொகையை மட்டும் கொடுத்துவிட்டு அனைத்தையும் தாங்கள் கொடுத்ததாக சொல்லி வருகிறார்கள். அதற்குள்ள வட்டி தொகையை மத்திய அரசு கட்டுமா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மத்திய அரசு தமிழக அரசை சிரமப்படுத்தினால் என்ன செய்ய முடியும். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அனைத்து திட்டங்களையும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன்தான் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விஜய் பாவம் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். மீண்டும் பிரசாரத்திற்கு செல்கிறார் என்பதை சொல்லி அவரை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.