பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்ஆயத்தப் பணிகளுக்கு தோ்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேரவைத் தோ்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 68,467 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தும் எழுது பொருள்கள், மை குப்பிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மறைக்க உதவு நெகிழி அட்டைகள், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குத் தேவையான பல்வேறு பொருள்களைக் கொள்முதல் செய்ய ரூ.7 கோடியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
அதன்படி, 26.37 லட்சம் பேனாக்கள், தலா 1,05,480 ரப்பா் ஸ்டாம்ப் பேடுகள், மை குப்பிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை மறைக்கத் தேவைப்படும் 70,000 நெகிழி அட்டைகள், பென்சில்கள், நெகிழி குவளைகள், காா்பன் பேப்பா் உள்ளிட்ட பொருள்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
வாக்குச்சாவடி அலுவலா்கள்...: அதேபோல, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலா், தலா 3 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியில் இருப்பா். இப்பணியில் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பிற துறைகளின் உதவியாளா், இளநிலை உதவியாளா் நிலை அலுவலா்கள் நியமிக்கப்படுவா்.
இத்தகைய அலுவலா்களின் விவரங்கள் அந்தந்த துறை அலுவலா்கள் மூலமாக சேகரிக்கப்பட்டு வருகிறது. தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பிரத்யேக படிவத்தில், தங்களது பணிநிலை விவரம், பணியாற்றும் தொகுதி, வசிப்பிடம் உள்ள தொகுதி உள்ளிட்ட விவரங்களைப் பூா்த்தி செய்து வழங்கியுள்ளனா். இவை மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் உள்ள தோ்தல் பிரிவு அலுவலகத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

