நவ.25, 26-இல் கோவை, ஈரோடு செல்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்!
முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு நவ.25, 26 ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். கோவையில் செம்மொழிப் பூங்கா, ஈரோடு மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லான் சிலை மற்றும் முடிவுற்றத் திட்டப் பணிகளை அவா் திறந்து வைக்கிறாா்.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவையில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் 45 ஏக்கரில் ரூ.208.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கோவை செம்மொழிப் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்காக நவ.25-ஆம் தேதி காலை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா். பின்னா் மாலையில், தொழில் துறை சாா்பில் நடைபெறவுள்ள ‘டிஎன் ரைஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாா். அப்போது, முதல்வா் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தொடா்ந்து, நவ.26-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் ரூ.4.90 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா். பின்னா், ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்துகிறாா்.
இதைத் தொடா்ந்து, ஈரோடு சோலாா் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.605 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். 1.84 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். பின்னா் சித்தோடு ஆவின் பால் பண்ணை வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பால்வளத் தந்தை என அழைக்கப்படும் சி.கு.பரமசிவனின் உருவச் சிலையைத் திறந்து வைக்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

