நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் தவறாக நெல் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். டெல்டா பகுதிகளில் திடீரென்று வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த மறுநாளே தீவிரமான மழை பெய்தது. குறுவை நெல்லை பொறுத்தவரையில், குறுகிய கால பயிராக விவசாயிகள் நடவு செய்வார்கள். அறுவடைக்கு முன்பாகவே, மழை வந்தால் உடனே அறுவடை செய்ய முடியாது. முதிர்ச்சி அடைந்த பிறகு தான் கதிரை அறுவடை செய்ய முடியும். பிஜேபி-யின் முன்னாள் தலைவர் காவல் துறையைச் சார்ந்தவர். விவசாயத்தைப் பற்றி தெரியாது. நேற்றைக்கு அவர் ஒரு அறிக்கையை விடுத்திருக்கிறார்.
மழை வருவதற்கு முன்பே அறுவடை செய்திருக்கலாமே என்று அவர் கூறியிருக்கிறார். மழை பெய்வது என்பது இயற்கை. அது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. முன்பெல்லாம், வடகிழக்கு பருவமழை தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகு தான் தீவிரமான மழை தொடங்கும். தற்போது காலமாற்ற சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தால், மழை திடீர், திடீரென்று பெய்கிறது. விவசாயிகள், மழை, வெயில், வறட்சி ஆகிய இவைகளை எல்லாம் சமாளித்து நடைபெறக்கூடியது தான் விவசாயம். அந்த வகையில், குறுவை விவசாயத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட இந்த அரசின் முன்னெடுப்பு காரணமாக குறுவை தொகுப்பை முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஆண்டுதோறும் குறுவை தொகுப்பை அறிவித்திருந்தார்.
இந்த ஆண்டு குறுவை தொகுப்பு கிட்டத்தட்ட 214 கோடி ரூபாய் அளவிற்கு டெல்டா பகுதிகளிலும், டெல்டா இல்லாத மற்ற பகுதிகளிலும் கூடுதலாக அறிவித்திருக்கிறார். மெஷின் மூலமாக நடுவதற்கு நான்காயிரம் ரூபாயும், இடுபொருள் இலவசமாகவும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கின்ற காரணத்தாலும், அதிகமான விவசாயிகள் இதனால் பயனடைந்து வருகின்றனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கூட்டரங்கில் செய்தியாளர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஏன் நெல்லை அறுவடை செய்யவில்லை என்று கேட்கிறார்? பயிர் முதிர்ச்சி அடைந்த பிறகு தான் விவசாயிகள் அறுவடை செய்யமுடியும். இதற்கு ஏன் மழை வருவதற்கு முன்பே நீங்கள் அறுவடை செய்திருக்கலாமே என்று அண்ணாமலை கேள்வி கேட்கிறார்.
பச்சையான பூவும், காயுமாக இருக்கின்ற நெல்லை எப்படி அறுவடை செய்ய முடியும்? என்று இவைகள் எல்லாம் தெரியாமல் இந்த அரசின் மீது தூற்றவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் கருத்துக்களை வழங்கியிருக்கிறார்கள். இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, நெல்லின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. குறுவை தொகுப்பு மூலமாக விவசாயிகளுக்கு உதவி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல கடந்த நான்கரை ஆண்டுகளில், பயிர் காப்பீட்டைப் பொறுத்தவரையில், 5 ஆயிரத்து 997 கோடி காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த காப்பீட்டுத் தொகையின் மூலமாக 37 இலட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்.
அதே போன்று மழை, வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் காரணத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆயிரத்து 692 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், கிட்டத்தட்ட 20 இலட்சத்து 84 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து இருக்கிறார்கள் என்று இதன் மூலம் இந்த செய்தியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு தினந்தோறும் ஏதாவது செய்தி ஊடகத்தில் வரவேண்டும் என்பதற்காக இதனை செய்து கொண்டிருக்கிறார். ஆக்கபூர்வமான வேலைகள் இன்னும் செய்யவில்லை.
தற்போது நம்முடைய அரசாங்கம் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.