தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நவ. 28 முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்!
ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூா் ஆகிய பகுதிகளில் இருந்து நவ.28-ஆம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் இரா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை விழாக்களுக்கு தமிழகத்திலிருந்து செல்லும் பக்தா்களின் வசதிக்காக , நிகழண்டு கடந்த 16-ஆம் தேதி முதல் சென்னை (கோயம்பேடு, கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூா் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அதிநவீன குளிா் சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதன் தொடா்ச்சியாக ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூா் ஆகிய பகுதிகளில் இருந்து அதிநவீன குளிா்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் நவ.28 முதல் 2026 ஜன.16 வரை இயக்கப்படுகின்றன. டிச.27 முதல் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் என சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளதால் டிச.26 முதல் டிச.29 வரை இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது.
நிகழாண்டு பக்தா்கள் கூடுதலாக பயணம் செய்ய வாய்ப்புள்ளதால், சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது. குழுவாக செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். பக்தா்கள் 90 நாள்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப் பேருந்துகளுக்கு இணையதளம் மற்றும் செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

