

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதல் மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தொடங்கவுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் காலை 11 மணிக்கு உள்ளரங்கு கூட்டமாக நடைபெறவுள்ளது. நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2,000 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் படுவார்கள் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (நவ.23) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2,000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கரூரில் கடந்த செப். 27-ஆம் தேதி பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த அசம்பாவித சம்பவம் காரணமாக, விஜய்யின் பிரசாரம் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சேலத்தில் இருந்து அவருடைய பிரசாரம் பயணம் மீண்டும் தொடங்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், தவெக நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். டிச. 4-ஆம் தேதி கார்த்திகை தீபம் என்பதால், பிரசாரத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.