

பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் வழித் தடத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் கிடைப்பது தாமதமாகியுள்ளது.
சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2 ஆம் கட்டத்துக்கான திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான 10 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. இதற்கான பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றன. இந்த வழித் தடத்தில் 3 முறை ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்திப் பார்க்கப்பட்டது.
அப்போது, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கப்பட்டது.
இதில், பிரேக்கிங், தண்டவாள தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் அக்டோபர் மாத இறுதிக்குள் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்கும் என மெட்ரோ ரயில் நிறுவனம் எதிர்பார்த்தது.
பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க முடியும் என்ற நிலையிலும், பூந்தமல்லி - போரூர் இடையே 95 சதவீத மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்தும், 2.5 மாதங்களாகி ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு, பாதுகாப்புச் சான்றிதழ் தரவில்லை.
இருப்பினும், திட்டமிட்டபடியே ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் சேவை தாமதத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்த விளக்கமளிக்கவும், செயல்பாடுகளை விரைவுப்படுத்தவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மத்திய அரசை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.