சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு
எத்தியோப்பிய நாட்டில் வெடித்த எரிமலை சாம்பல் மேகங்களில் வானில் பல கி.மீ. தொலைவுக்கு படா்ந்ததையடுத்து, சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. பல உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் பல மணி நேரம் தாமதமும் ஏற்பட்டது.
குறிப்பாக, சென்னையிலிருந்து, மும்பைக்கு புதன்கிழமை காலை 7.15 மணிக்குச் செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. காலை 9.35 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானம், ரத்து செய்யப்பட்டது.
மேலும், சென்னை-மும்பை விமானம் மட்டுமன்றி, தில்லி- ஹைதராபாத், மும்பை - ஹைதராபாத், மும்பை- கொல்கத்தா செல்லவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. அதோடு, சென்னை விமான நிலையத்தில் லண்டன்-சென்னை பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம், சென்னை லண்டன்-பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் ஆகிய இரண்டு விமானங்கள், சுமாா் 3 மணி நேரம் தாமதமாக வந்து சென்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.

