டெட் தேர்வு தேர்ச்சி விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் தொடர்பாக...
டெட் தேர்வு தேர்ச்சி விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
Updated on
3 min read

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 (The RTE Act, 2009) பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம், 1993 (NCTE Act 1993), பிரிவு 12A-ல் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, ஆசிரியர்களைப் பாதுகாப்பதுடன், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்களை, குறிப்பாக தமிழ்நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்களை பாதிக்கும் அவசரமான மற்றும் முக்கியமான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவைக் கோரி இன்று (நவ. 25) கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 (The RTE Act, 2009) பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம், 1993 (NCTE Act 1993), பிரிவு 12A-ல் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, ஆசிரியர்களைப் பாதுகாப்பதுடன், பதவி உயர்வுகளுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்திட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.   

முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், சிவில் மேல்முறையீடு எண் 1405/2025, 1385/2025 மற்றும் 1386/2025 மற்றும் பிற வழக்குகளில் 01.09.2025 அன்று  உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சமீபத்திய தீர்ப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், அப்பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் TET தகுதியைப் பெற வேண்டும் என்றும், மேலும், ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டாலும், TET தகுதி பெறாவிட்டால் பதவி உயர்வுக்குத் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமமானது (National Council for Teacher Education-NCTE), 23-8-2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) போன்ற புதிய தகுதித் தேவைகளிலிருந்து ஆரம்பத்தில் விலக்கு அளித்திருந்தது என்றும், இருப்பினும், கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தற்போதைய இந்தத் தீர்ப்புரை, ஆசிரியர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட விலக்கினை மீறி, TET கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர், இதன் விளைவாக, இந்த ஆசிரியர்கள் இப்போது இரண்டு ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும்; இல்லாவிடில், அவர்களின் வேலை பறிக்கப்படும் என்ற நிலை பெருத்த நிருவாக சிரமத்தையும், ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட சிரமத்தையும் ஏற்படுத்தும் என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். 

பணி நிபந்தனைகளில் இத்தகைய மாற்றம் மற்றும் நியமனத்திற்குப் பின் பதவி உயர்வுக்கான அவர்களின் நியாயமான எதிர்பார்ப்பில் இடையூறு என்பது, ஆசிரியர்களின் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது என்றும், இது ஆசிரியர்களின் நியமனத்தின்போது, நடைமுறையில் இருந்த சட்டப்பூர்வ விதிகளின்கீழ் முழுமையாக தகுதி பெற்று, முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையோரை நேரடியாக பாதிப்பதாக முதல்வர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார். 

அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ நான்கு லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள முதல்வர், நியமனம் செய்யப்பட்ட நேரத்தில், அவர்கள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளையும் பூர்த்தி செய்தவர்கள் என்றும், சட்டப்படியான மற்றும் முறையான செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றும், அதோடு 2011-ல் TET அறிமுகப்படுத்தப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பணியில் சேர்ந்தவர்கள் அவர்கள் என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். 

இந்த ஆசிரியர்களுக்கு TET-ஐ முந்தைய தேதியிட்டு அமல்படுத்துவது என்பது, அவர்கள் பணியில் தொடர்வதற்கும் மற்றும் பதவி உயர்வுகளுக்கான தகுதிக்கும் நீண்ட காலமாக நிலைநிறுத்தப்பட்ட பணி உரிமைகளில் குறிப்பிடத்தக்க இடையூறை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர், இது மாநிலத்தில் நிர்வாகரீதியாக சாத்தியமற்ற ஒரு நிலையை உருவாக்குகிறது என்றும், பள்ளிக் கல்வி அமைப்பின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் கடுமையான அபாயத்தை ஏற்படுத்துகிறது என்றும் கவலைபடத் தெரிவித்துள்ளார். 

முந்தைய தேதியிட்டு இதனை அமல்படுத்துவது என்பது, பெரிய அளவிலான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நாடு முழுவதும் கண்கூடாகத் தெரியும் என்றும், ஆட்சேர்ப்பு சுழற்சிகள், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கும் தன்மை மற்றும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணி நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில், எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஆசிரியர்களை மாற்றுவது  சாத்தியமற்றது என்றும் தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.   

மேலும், ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட தகுதியைக் காரணமாகக் கொண்டு மட்டும், நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் அனுபவம் பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகளை மறுப்பது என்பது, பெருத்த அளவிலான சிரமத்தையும், தேக்க நிலையையும் ஏற்படுத்துவதாக கவலையோடு குறிப்பிட்டுள்ள முதல்வர், RTE சட்டத்தின் பிரிவு 23-ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்புரைகள் காரணமாக, நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்தக் குறிப்புரையினால் ஏற்படும் பாதிப்பு என்பது, பிரிவுக் கூறு 21-A-ன்கீழ் அரசியலமைப்பு ரீதியான கல்வி உரிமைக்கும் நேரடி தாக்கங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். 

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (The RTE Act, 2009) பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம், 1993 (NCTE Act 1993), பிரிவு 12A ஆகியவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்திடுமாறு பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டுள்ள முதல்வர், அப்போதுதான் 23.08.2010 அன்று பணியில் இருந்த ஆசிரியர்கள் பாதுகாக்கப்படுவதுடன், பதவி உயர்வுகளுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்திட இயலும் என்று தெரிவித்துள்ளார்.

Summary

Chief Minister Stalin's letter to Prime Minister Narendra Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com